பாரதிதாசன் தமிழிலக்கியப் பேரவை ஆண்டு துவக்க விழா
பாரதிதாசன் தமிழிலக்கியப் பேரவையின் பத்தாம் ஆண்டு துவக்கவிழா கல்லூரி அரங்கில் ஆகஸ்ட் திங்கள் ஆறாம் நாள் காலை 8.15 மணியளவில் நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாண்புமிகு நீதியரசர் திரு. சு. இராஜேஸ்வரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இவ்விழாவில் இவ்வாண்டிற்கான தலைவர், செயலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகப்படுத் தப்பட்டனர். இந்த ஆண்டிற்கான கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, பட்டிமன்றம் ஆணீய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 26. 06. 2010 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு செம்மொழி மராத்தான் ஓட்டம் எம் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழறிஞ்கர் பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து செம்மொழி ஓட்டத்தினைத் தொடங்கிவைத்தார். இந்த மினி மராத்தான் ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியப் பெருமக்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள். இவ்வோட்டத்தில் முதல் 10 இடங்களைபெற்ற மாணவ மாணவியர்களுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன.
தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கவிதைகள்
செம்மொழித் தமிழ்க் கவிதை
ஆருயிர் தமிழ் மொழியே, என் அன்புதாய்மொழியே - உன்னை
ஆரணங்காய், தமிழ் ஆரணங்காய் உருவகித்து - உன்
அரும் பெரும் பெருமைகளை கவிதையில் காட்டிட
அரங்கேறி வந்துள்ளேன் அடியேன் நான்.
அலை கடல்களின் கன்னிகை நீ
அடர்காடுகளின் தேவதை நீ
பொங்கும் பொய்கைகளின் அரசி நீ
மலைகளை மடியில் தாங்கிடும் மாது நீ
மலை வாழிடங்களின் மலர் மங்கை நீ
மூவேந்தனை மைந்தராய் கொண்டவள் நீ
முச்சங்கங்களை உறவிடமாய் கண்டவள் நீ
முத்தமிழை ஆபரணமாய் அணிந்தவள் நீ
முப்பெரும் தேவியருள் இணைந்தவள் நீ
பாவலர் கை பாவையும் நீ - தமிழ்
புரவலர் பாராட்டும் பூவையும் நீ
ஆன்மீக உணர்வை ஊட்டும் அன்னையும் நீ
ஆய கலைகள் அறுபத்து நான்கும் அறிந்தவள் நீ
ஐம்பெரும் காப்பிய தலைவியும் நீ
ஐவகை நிலத்தின் மடந்தையும் நீ
இவ்வையகம் போற்ற வாழ்பவள் நீ
உலகம் போற்றும் உயர்தனி செம்மொழியாளே உன்னை
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழ் வாழிய வாழியவே என
வாயாற பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துகிறேன்
வாழ்க தமிழ் வெல்கதமிழ்.
வி.திவ்யா, முதலாம் ஆண்டு வணிகவியல் துறை.
தமிழ்
வரையறை கூற இயலாத தமிழே
உனக்கு
வரையறை கூறும் சிறுபடைப்பு
இனிமையில் இனிமை உனது அருமை
இதை இன்னும் அறியாமல்
இருக்கிறது
பலரது தனிமை
நீ தோன்றிய காலம் தெரியாது
ஆனால்
உன்னால் தோன்றிய மொழிகளின்
எண்ணிக்கை தெரியும்
நீ தோன்றாமல் போய் இருந்தால்
ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு
தோன்றியதாலே தானே மிகச்சிறப்பு
உனக்கல்ல
எங்களுக்கு...
எண்ணிலா இலக்கியம் தந்தாய்
எல்லோரையும் ஈர்த்துக்கொண்டாய்
உன்னை போல மொழியும்
இல்லை
எதுவும் ஏதும் நிகரும் இல்லை
தமிழே,
உன் அசைவில் அர்த்தம் கண்டேன்
அழகில் முழ்கிவிட்டேன்
அசைவு ஒவ்வொன்றிர்க்கும்
ஆயிரம் அர்த்தம் கண்டேன்..
செம்மொழி பட்டம் பெற்றாய்
மாநாடும் ஏற்றுக்கொண்டாய்
உன்னைப் போல அழகே இல்லை
பிழைப்பிற்கு மேன்மை தந்தாய்
அரவணைக்க அன்பு தந்தாய்
உயரிய இலக்கியம் தந்தாய்
போராட உறுதி தந்தாய்
வையத்தில் பெருமை தந்தாய்
வாழ்க்கையில் வளமை தந்தாய்...
நீ இல்லை என்றால்
எங்களுக்கு வாழ்வே இல்லை...
ஆங்கிலேயர் போய்விட்டனர்
ஆனால்
ஆதிக்கம் இன்னும் இங்கு குறையவில்லை..
தமிழே உன்னை
வான் என்பேனோ
நிலவென்பேனோ
நீரென்பேனோ
நெருப்பென்பேனோ
கடலென்பேனோ
அலையென்பேனோ
இவ்வனைத்தையும் விட மேலான
என் மூச்சுக் காற்று என்பேன்
புரியாத மொழிகளின் இடையில்
புரிந்த மொழியே
என்றும் உன்னை
வாழ்த்திடுவோம்
வணங்கிடுவோம்
இரா. சுகன்யா, முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல்
தமிழ்
சிந்தனையில் இருக்கும் சித்தன் கூட
சில நேரங்களில் பாடல் இயற்றுவான் - என்
தாய் மொழியில்..
ஆழ்கடலின் எல்லையைக் கூடகாண இயலும் - ஆனால்
தமிழின் வயதினைக் காண இயலாது.
பல அறிஞர்களுக்கு அதை அறிய ஆசைதான் - ஆனால்
அவர்கள் அதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
முன்பல்லவா பிறந்திருக்க வேண்டும்...
ஆதித் தமிழன் எழுதிய கல்வெட்டுக்கள் கூட
கரைந்திருக்கும் காலப் போக்கில்...
கலைத் தமிழ் இன்னும் படர்ந்து கொண்டிருக்கிறது இவ்வுலகில்...
அவ்வளவு பழமை அவ்வளவு முதுமை
ஆனாலும் இன்னமும் இளமைதான்.
ஆயுத எழுத்தைக் கொண்டுள்ள மொழி
ஆனாலும் அறத்தை மட்டுமே வலியுறுத்தும்.
தாயால் மட்டும்தான் பிள்ளைகளைப் பெற முடியும்
என் தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகள் - நம்
அண்டை மாநில மொழிகள்...
தமிழின் பெருமையை அதிகம் நூல்கள் சொன்னதில்லை
பெருமை பெற்ற நூல்கள் எல்லாம் அதிகம்
தமிழிலே இருப்பதனாலோ..
பழையென கழிதலும் புதியன புகுதலும் - என்பது
பழமொழி.... - அது
அவ்வாறே பொருந்தி இருப்பது - என்
தமிழ் மொழி - ஆதலால்
இன்றும் என்றும் இது உயர்தனிச் செம்மொழி.
இர. திலிப் குமார், இரண்டாமாண்டு, காட்சி தகவலியல் துறை.
தமிழ்
நாவை இனிக்கும் இனியக்
கரும்பைச் சுவைத்தேன்
இன்பமாய் விளங்கும் இனியத்
தேனைச் சுவைத்தேன்...
ஏன்? என் தாயின்
அன்பைச் சுவைத்தேன்
ஆனால் அமிர்தே என் தமிழே
உன்னை சுவைக்க உன் காலம்
எனக்கு வேண்டுமோ?
உயர் கம்பனின் உயிர்த் தமிழைப் படித்தேன்
பாட்டுக் கொரு பாரதியின் தெள்ளமுதைப் படித்தேன்
புதுமைப்பித்தன் வடித்த வான் தமிழைப் படித்தேன்
வள்ளுவன் வாழ்த்திய வன்தமிழைப் படித்தேன்
வானோடு பொருந்திய உன் புகழை
படிக்க இயலாததை நினைத்து என் கண்ணீரை வடித்தேன்....
அ.ஸ்டாலின், முதலாம் ஆண்டு, வணிகவியல் துறை.
தமிழ் சிறப்பு
உன்னை பெருமை படுத்த
வாழ்ந்தவர் சிலர்
உன்னால் பெருமை அடைந்து
வாழ்பவர் பலர்
நீ
இயற்கை தாயின் மருத்துவமனை
இலக்கியம், இலக்கணம்
அதில் அரிய மருந்துகள்
ஒவ்வொரு மனிதனின் (தமிழனின்)
அகத்திலும்
மூன்றாவது கையாய்
மூன்றாவது கண்ணாய்
இன்னொரு உயிராய்
இருப்பது இருந்தது இருக்கபோவது
தமிழ்.. தமிழ்.. தமிழ்...
ம. சுரேந்தர், மூன்றாம் ஆண்டு, வணிக நிர்வாகவியல் துறை.
தமிழ்
அகத்தியனார் தந்த மொழி தமிழாம் - இச்
சமுகத்திலே சிறந்த மொழி அதுவாம்
பேச இனிய மொழி தமிழ்தான் - அதனை
அனைவரும் பேசி மகிழ்ந்திடுவோம்.
வளங்கள் நிறைந்த தமிழை - நாம்
வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்
வழக்கம் மாற்றிக் கொண்டால்
வழக்கொழிந்து போகும்.
எங்களால் நீ வாழவில்லை தாயே
உம்மால் தான் நாங்கள் அனைவரும்
மகிழ்வோடு வாழ்கிறோம்.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
........... தாயே,
உனக்கு என்றும் இனமைதான் தவிர
முதுமையல்ல.
எம். லேகா, மூன்றாம் ஆண்டு, வணிகவியல் துறை.
கட்டுரை
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்கள்
ஆண்டாள்
முகவுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் தமிழ் இலக்கியங்களில் ஆண்பாற் புலவர்களின் ஆதிக்கமே இருந்த போதிலும், ஔவையார், காரைக்கால் அம்மையார் போன்ற சில பெண்பாற் புலவர்களும் சொல்லாலும் பொருளாலும் சிறந்த செய்யுள்களை இயற்றி உள்ளனர். அவர்களுள் பல்லவர் காலத்தில் வாழ்ந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியாரை சார்ந்ததே எமது கட்டுரையாகும்.
கோதை வரலாறு
பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் தன் நந்தவனத்தில் திருதுளாயவேர் என கூறப்பட்ட துளசிச் செடிகளுக்கிடையிலிருந்து பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்து கோதையெனப் பெயரிட்டு இறையன்பும் சிறந்த ஞானமும் கொண்டவளாக வளர்த்தார். திருமாலின் மீது கொண்ட அளவில்லாத பற்றால் அவனையே தம் கணவனாக அடைய எண்ணித்துதித்து அவனுடன் இரண்டறக்கலந்தார்.
ஆண்டாள் - பெயர்க்காரணம்
பெரியாழ்வார் திருமாலுக்கு சூட்ட கட்டிவைத்த மலர் மாலையை கோதை தானணிந்து அழகு பார்த்து பின்பு முன்போலவே அம்மாலையை பந்தாக்கி இறைவனுக்கு அனுப்பி வந்தார். ஒரு நாள் மலர் மாலையில் கூந்தலிழை ஒன்று இருக்கக்கண்டு உண்மையை அறிந்த பெரியாழ்வார், மனம் வருந்தி வேறுமாலையைக் கட்டி இறைவனுக்கு அணிவித்தபோது கண்ணன் அதனை ஏற்க மறுத்தார். பரம்பொருளின் செய்கைக்குக் காரணம் அறியாது திகைத்து நின்ற பெரியாழ்வாரிடம் "அவள் சூடிக்கொடுக்கக் கொண்டு வாரும்" என்று கூற, பெரியாழ்வார் அவ்வாறே செய்தார். இவ்வாறு இறைவனையே ஆண்டு கொண்டதால் "ஆண்டாள்" என்றும் தான் சூடிய மாலையை இறைவனுக்குக் கொடுத்ததால் "சூடிக்கொடுத்த நாச்சியார்" என்றும் போற்றப்பட்டார்.
திருப்பாவை உருவான கதை
இறைவனான கண்ணனையே தன் கணவனாக அடைய எண்ணி பதினான்கு திருநட்சத்திரங்கள் விரதம் கடைப்பிடித்தார். அதனை ஏற்ற திருமால் பெரியாழ்வாரின் சொப்பனத்தில் தோன்றி அவரது மகளான கோதையை மணக்கோலத்தில் தன் கோயிலுக்கு அழைத்து வந்து தமக்கு மணமுடித்துத் தருமாறு கூறினார். இதனைப் பெரியாழ்வார் ஆண்டாளிடம் தெரிவிக்க, ஆண்டாள் பட்டுச் சேலையும் அணிகலன்களும் தரித்து பருத்த செங்கழுநீர் மாலை அணிந்து அகிலமும் காணும்படி அன்னமென நடைகொண்டு திருமாலின் திருமுன்பு சென்று நாக பர்யங்கத்தின் மீதேறி திருவரங்கச் செல்வனைச் சேர்ந்து அவனை என்றும் பிரியாதிருப்பவராயினார். விரதம் கடைப்பிடித்த காலத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்பாவையாகும்.
கவிபாடும் திறன்
ஆண்டாளின் திருப்பாவையில் "மார்கழித்திங்கள்" எனத்தொடங்கும் பாடலில் உள்ள செய்திகளைப் பின்பற்றியே திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நீராடி விரதம் கடைப்பிடித்து வந்தால் அவர்களது விருப்பம்போல் மணவாளன் அமைவான் என்னும் ஐதீகம் தமிழகத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. திருப்பவையிலுள்ள பாடல்களுள் பல எட்டடி நாற்சீரொருவிகற்பக் கொச்சகக் கலிப்பா என்னும் பாவகையில் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் ஆண்டாள் அவர்களின் கவிபாடும் திறன் நன்கு வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இசை ஞானம்
"வாரணமாயிரம்" எனத் தொடங்கும் பாசுரத்தில் கண்ணனை மணப்பதாக ஆண்டாள் கண்ட கனவை விவரிக்கும் பாடல்கள் மிக்க நயமுடையன.
'மத்தனம் கொட்டவரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தர்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்
.................................................................................'
என்று தான்கண்ட கனவைக் கூறி மகிழ்கின்றார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பாடுவதற்கரிய ராகங்கள் எனக் கருதப்படும் காம்போதி, பைரவி, சங்கராபரணம் போன்ற பல்வேறு ராகங்களில் பாடப்பட்டவையாகும். இவரது பாடல்களைப் பள்ளமடை என்றும் பிற ஆழ்வார் பாடல்களைப் மேட்டுமடை என்றும் குறிப்பிடுவர். இதன் மூலம் ஆண்டாளின் இசை ஞானம் வெளிப்பட்டுள்ளது.
நிறைவுரை
குழந்தைகளை ஈனும் இயந்திரங்களாகவும், ஏவிய பணிகள் அனைத்தும் செய்திடும் தோல்பாவைகளாகவும் பெண்கள் கருதப்பட்ட கால கட்டத்திலும் கூட தமிழ்மொழியின் இலக்கணங்களையும் அதன் அழகையும் அறிந்து அவற்றை மெருகூட்டும் வகையில் பல இறை நயம் மிக்க பாடல்களை கேட்போர் அனைவரும் மகிழ்ந்து வியக்கும்படி பாடவல்ல பெண்டிரும் வாழ்ந்தனர் என்பது எமது இக்கட்டுரையின் முடிவாகும்.
அண்ணா ஆதர்ச மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பாட்டுப்போட்டியில் ஆர். அம்பிகா (பிசிஏ) ஆர்.கலைவாணி (பி.காம். மாலை நேரம்) மூன்றாம் பரிசினைப்பெற்றனர்.
ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற நாடகப்போட்டியில் கமலேஷ், பிரசாந்த் பாலாஜி, அசோக்ராஜ், ஸ்டாலின், ஆனந்த், கதிர்வேல் ஆகியோர் முதல் பரிசும் உரூபாய் 1500 பணமுடிப்பும் பெற்றனர்.
|